கவிஞர் வாலி-யின் வாழ்க்கை சுவடுகள்

 • தமிழ்த் திரைப்பட இசைத் துறையில், பீஷ்மரைப் போல் சகல நுட்பங்களையும் அறிந்தவர். கட்சி மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் இனியவராய் அவர் தனது தமிழ்க் கவிதைப் பயணத்தை மேற்கொண்டார்.
 • தமிழும், ஆன்மிகமும் கலந்த கவிச்சிற்பி வாலி. அவரது பிறந்த நாள் அக்டோபர், 29. நெருப்பாய் சிவந்த மேனியும் நெற்றிக் குங்குமமும், நித்தம் முத்தமிடும் வெற்றிலைச் சிவப்பும், எளிதில் எதிராளியின் பலத்தையும் தன்னகத்தே பெற்றிடும் ஆற்றல்மிக்கவர்.

 •  கடல்களில் தீவுகளும், தீபகற்பங்களும் சகஜம். நதிகளில் அப்படி வாய்ப்பது அபூர்வம். ஆனால், காவிரியை தென்கரையாகவும், கொள்ளிடத்தை வடகரையாகவும் கொண்ட திருவரங்கம்தான் கவிஞர் வாலியின் சொந்த ஊர்.
 •  திருவரங்கம் இரண்டு ரங்கராஜன்களைத் தந்தது. அந்த இருவருமே அந்தப் பெயர்களை பெருமாளுக்கே கொடுத்துவிட்டு, வேறு பெயர்களில், பார் புகழ உயர்ந்தார்கள். ஒருவர் எழுத்தாளர் சுஜாதா. இன்னொருவர் கவிஞர் வாலி. ஆம். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.
 • ரங்கராஜன், வாலி ஆன கதையை அவரது வாக்கியங்களிலேயே வாசியுங்கள். ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்னும் அவரது நூலிலிருந்து…
  ‘எட்டாம் வகுப்பு படிக்கும்போதே நான் ஓவியங்கள் வரையத் தலைப்பட்டேன். எவரைப் பார்த்தாலும்… அவரைப் போலவே படம் வரையும் ஆற்றல் என்னுள் இயல்பாக ஏற்பட்டிருந்தது.
 • புகழ் வாய்ந்த ஓவியர்களான மணியம் சந்திரா இவர்களது படங்களை ‘கல்கி’ பத்திரிகையில் கண்டு நான் பித்தாகிப் போன நாட்கள் உண்டு. அதேப்போல் ஆனந்தவிகடனில் பணிபுரிந்த மாலி என்னும் மகத்தான ஓவியன் மேல் எனக்கு மாளா காதல்.
 • நான் சின்னச் சின்ன சித்திரங்கள் வரையும்போதெல்லாம், பாபு என்னும் பள்ளித்தோழன் பக்கத்திலிருந்து பரவசப்படுவான்.  இருப்பினும் என்றென்றும் நான் அவனை மறக்க இயலாதவாறு அவன் ஒரு காரியத்தை செய்து வைத்தான். மாலியைப் போல நான் ஒரு சிறந்த சித்திரக்காரனாக விளங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அவன்தான் எனக்கு ‘வாலி’ என்று பெயர் சூட்டினான். அதன்பிறகு, எங்கள் ஊரில் உள்ள ஆட்டுக்குட்டிகூட என்னை வாலி என்றே அழைக்கத் தொடங்கியது.
 • பேசும் சினிமாவும், நானும் பிறந்தது ஒரே ஆண்டில்தான் (1932) இதனால்தானோ என்னவோ ஒருவித சகோதரத்துவத்தோடு சினிமா என்னை சுவீகரித்துக் கொண்டது. பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது நான் பாட்டெழுதப் புகுந்தேன். அவர்களோடு போட்டியிட்டு வெற்றி பெறுவது அசாத்தியம் என்று எனக்குத் தெரிந்தது. எத்தனையோ கவிஞர்கள் கோடம்பாக்கத்தில் கடைவிரித்தால், கொள்முதலுக்கே கட்டுப்படியாகாது என்று ஊர் திரும்பி விட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே கப்பல்களுக்கு நடுவே கட்டுமரத்தோடு கடலில் இறங்கினேன்.
 • கதைப்பித்தும், ஓவியப்பித்தும் என்னை ஆட்டிப் படைத்த இளம்பிராயத்திலேயே நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். அதன் பெயர் ‘நேதாஜி’ என்றும் குறிப்பிடுகின்றார்’
 • கரூருக்கு அருகே உள்ள வாங்கல் என்னும் குக்கிராமம்தான் வாலி அவர்களின் தந்தையின் பூர்வீகம். வாங்கல் ஶ்ரீனிவாச அய்யங்கார் என்று அழைக்கப்பட்டார்.  தாயாரின் பெயர் பொன்னம்மாள்.
 • பள்ளி நாட்களில் வாலியின் கவித்துணுக்கு ஒன்றை வாசித்து விட்டு, ”தமிழ்தான் உனக்கு சோறு போடும். ஆனா, அது எப்போ போடும்னு சொல்ல முடியாது எழுதுவதை நிறுத்தாதே” என்று புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியிடம் வாழ்த்து பெற்ற பெருமை இவருக்குண்டு.
 • கொள்ளிடக்கரையில் ‘கழுதை மண்டபம்‘ என்று ஒரு பழங்கால கட்டடம் உண்டு. தனது விடுமுறைகளில், கவிதை எழுதுவதற்கு அந்த இடத்தையே தேர்வு செய்துபோய் கவிதைகள் எழுதுவார். அப்போது எழுதப்பட்ட பாடல்கள் பின்னாளில் புகழ்பெற்றன. அவற்றில் ஒன்றுதான் ”கற்பனையென்றாலும், கற்சிலையென்றாலும் கந்தனே உனை மறவேன்” என்ற பக்தி ரசம் சொட்டும் பாடல்.
 • திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதற்கு, வருவதற்குமுன் திருச்சி வானொலி நிலையத்தில் 1950-களில் கவிஞர் வாலி பணியாற்றி இருக்கின்றார். ”எருமை மாட்டை தண்ணியிலே போட்டா விலை பேச முடியும். முதல்ல புறப்பட்டு மெட்ராஸ் வாருமய்யா” என்று அன்புக் கட்டளையிட்டவர் டி.எம்.எஸ்.
 • தமிழின் பால் மாறாத காதலும், பல ஆயிரம் தமிழ்க் கவிதைகளும் எழுதிக் குவித்த கவிஞர் வாலி, பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் வடமொழியையே கற்றவர். கவிதையின் பாலும் தமிழின் மீதும் இருந்த பற்றுதலால் கவிஞரானார்.
 • கவிஞர் வாலியை தனது ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு படக்கம்பெனியாக அலைந்து திரிந்து வாய்ப்புத் தேடித் தந்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். இவரை ‘கோபி’ என்றே செல்லமாய் அழைப்பார். திரைப்பட பாடல் எழுத கவிஞர் வாலி எடுத்த முயற்சிகள் ஏராளம். சென்னைக்கும், ஶ்ரீரங்கத்துக்கும் அலைந்த அலைச்சல் அநேகம்.
 • 1958 ல் கெம்பராஜ் அரஸ் இயக்கிய ‘அழகர் மலைக்கள்ளன்’ படத்தில் ‘நிலவும் தாரையும் நீயம்மா. உலகம் ஒரு நாள் உனதம்மா” என்ற பாடல்தான் கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல். பாடலைப் பாடியவர் பி.சுசீலா.
 • தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!
 • ‘பேராசை பிடித்த பெரியார்” என்று பெரியாரைப் பாராட்டி அவரது புகழ் பாடும் நாடகத்தையும் அரங்கேற்றி, பெரியாரிடம் பாராட்டு பெற்றவர். இந்த நாடகத்தில் நாம் தமிழர் இயக்கத்தை நடத்திய ஆதித்தனாரும் ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தார். இவர் தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்” என்று வாலி அவர்கள் எழுதிய பாடலை தந்தை பெரியார் பெரிதும் பாராட்டினார்.
 • ”வாலி! நீ நினைக்கிற மாதிரி சினிமா பிரவேசம் அவ்வளவு சுலபமானது இல்லே…” என்று அறிவுரை கூறியவர் ஜாவர் சீத்தாராமன். பின்னாளில் அவர் கதை வசனம் எழுத, வாலி பாடல்கள் எழுத ஏ.வி.எம். தயாரித்த படம் உயர்ந்த மனிதன்.
 • கண்ணதாசன் தமிழ்த்திரை இசையில் சாதனை படைத்தவர். ஆனால் அவருக்கு மிகச் சரியான இணைகோடாகத் திகழ்ந்தவர் கவிஞர் வாலி. இந்த இரண்டு தண்டவாளங்களின் மேல்தான் திரை இசை என்னும் ரெயில், பயணம் செய்தது.
 • 1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய ”நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.
 •  சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.
 •  கவிஞர் வாலி முதன்முதலாக எழுதி, ‘நன்றாக இல்லை’ என்று நிராகரிக்கப்பட்ட பாடல்தான், பின்னாளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. அந்த பாடல்தான். படகோட்டியில் இடம் பெற்ற ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்’ பாடல். படகோட்டி படத்தின் தலைப்பே வாலி அவர்கள் கூறியதுதான். அடிமைப் பெண்ணில் இடம் பெற்று ஜெயலலிதா பாடிய ‘அம்மா என்றால் அன்பு’ பாடலை இயற்றியவர் வாலி.
 •  வாலி எழுதிய அநேகப் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே எண்ணிடும் தவறான நிலை அடிக்கடி நிலவும். ”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!” பாடலை எழுதியவர் கண்ணதாசன் அல்ல. வாலியே. இப்படி அநேகம் உண்டு.
 • கவிஞர் வாலி அவர்கள், தனது நாடகமொன்றில் கதாநாயகியாக நடித்த திலகம் என்பவரை, கீழ்த்திருப்பதி கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டவர். ஆச்சாரமான வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், எந்த மூடநம்பிக்கையும் இல்லாதவர். கந்தவேள் முருகனையும், அம்மனையும் தனது இஷ்டதெய்வமாக வழிபட்டார்.
 •  ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்னும் நூலில் தன் வாழ்வின் சரிதத்தை எந்தவித சமரசமும் இல்லாமல், சத்ய சோதனையைப் போல், உள்ளது உள்ளபடி எழுதினார். அதில் அவர் கையாண்டுள்ள எழுத்துநடையும், சுவாரசியமான, பிரமிக்கத்தக்க சம்பவங்களும், ஒரு நாவலைப் போல் சுவையானவை.
 • மெல்லிசை மன்னரையும் முக்தா சீனிவாசனையும் எப்போதும் நன்றியோடு தனது நூலில் நினைவு கூறுகின்றார். நூல் முழுவதும் அவருக்கு சிறு உதவி செய்தவர்களைக் கூட நன்றி பாராட்டி எழுதுகின்றார்.

ஆளுமைகளின் அன்பில்…

 •  திரைப்படத் துறையில் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என்று பல தலைமுறையைப் பார்த்தவர். அரசியலிலும், பெரியார், அண்ணா காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா என்று சகலருடன் நல்லிணக்கமான உறவை வளர்த்தவர். குழந்தையைப் போல் எல்லோருடனும் இனிமையாகப் பழகியதால்தான், திரை இசையில் வியக்கவைக்கும் சாதனைகளை ஆற்ற முடிந்தது.

வாலியின் படைப்புகள்

 • வாலி எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ்பெற்றவை. ஆனந்த விகடன் இதழில், தான் பழகிய ஆளுமைகள் பற்றி  வாலி எழுதிய‌ ‘நினைவு நாடாக்கள்’ என்ற தொடரும் பெரும் புகழ்பெற்றது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது