விநாயகரின் வியக்கத்தக்க 100 தகவல்கள் (2/4)
-
வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.
-
திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.
-
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்ப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
-
விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.
-
பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.
-
ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.
-
ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.
-
சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவி லில் தீப்பெட்டி செய்வோர் ஒவ் வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய் வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயலில் உங்களுக்குத் துணையாக இந்தக் கணபதி விளங்குவார்.
-
முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
-
சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.
-
வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
-
நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.
-
அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.
-
கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
-
குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.
-
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.
-
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.
-
ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
-
இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
-
வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.
-
பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
-
தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.
-
வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
-
அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.
-
‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.